உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம்

அறநெறி தழைத்து அல்லன நீங்கி உலகம் சிறப்புறக் குறள் வழிகாட்டுகிறது.பின்பற்றிச் செம்மையான வாழ்வு வாழத் தவறிய குற்றம்.நம்முடையதே.”இந்தியாவில் ஏனைய தத்துவநூல்கள் அனைத்தும் இல்லாத உலகுக்கே வழிகாட்டுகின்றன.திருக்குறள் மட்டுமே நாம் வாழும் உலகத்தில் முறையாகவும் நெறியாகவும் வாழ வழிகாட்டுகின்றது.”எனத் திருக்குறளைப் போற்றினார் ஆல்பர்ட்டு சுவைட்சர்.

1949-ஆம் ஆண்டு தந்தை பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டின் மூலமே தமிழுலகு முழுமையும் திருக்குறள்  மக்கள்மன்றத்தின் கவனத்தைக்கவர்ந்தது. பெரியார் நெறி நின்ற பேராசிரியர் சி.இலக்குவனார் அந்த மாநாட்டில்  திருக்குறளைக் கல்விநிறுவனங்களில் பாடமாக அறிமுகப்படுத்துமாறு வேண்டிய தீர்மானத்தை அன்றைய கல்வி அமைச்சர் அவினாசிலிங்கனார் நடைமுறைப்படுத்தினார். இரண்டாண்டுகளுக்கு முன்னர் நீதியரசர் அரங்க மகாதேவன் வழங்கிய நீதிமன்ற ஆணையால் பள்ளிக்கல்வி பயிலும் பிள்ளைகள் அறத்துப்பாலும் பொருட்பாலும் முழுமையாகக் கற்கவழி பிறந்தது.

திருக்குறளைப் படிக்கவும் குறள்வழிச்சிந்தித்து வாழ்வுமுறையை நெறிப்படுத்திக் கொள்ளவும் குறள் அமைப்புகள் செயற்பட்டுவருகின்றன.இணையதளத்தைப் பயன்படுத்திக் கொண்டு திருக்குறள் கல்வியை மேலும் விரிவாகவும் விளக்கமாகவும் மக்கள் மன்றத்தில் செல்வாக்குப் பெறச் செய்யும்  நோக்குடன்  உலகத் திருக்குறள் இணையக் கல்விக் கழகம்  (International Thirukkural Virtual Institute)இணையதளத்தில் உலாவரத் தொடங்கியுள்ளது.உலகத் தமிழர்கள் பயன்பெற   வேண்டும்.

பேராசிரியர் சி.இலக்குவனார் தமது வாழ்நாள் முழுமையும் குறள்நெறிபரப்பும் பணியில் உழைத்துவந்தார். குறள்நெறி என்னும் திங்களிருமுறை இதழைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிட்டு மக்கள்மன்றத்தில் ஒரு சிந்தனை மலர்ச்சியை ஏற்படுத்தினார்.1966 மே முதல் திசம்பர் வரை ஆறு திங்கள் நாளிதழாகவும் நடத்தினார்.

இன்றைய சூழலில் சிக்கலும் தடுமாற்றமும் பெருகிவரும் இல்லறம் நல்லறமாக நடைபெறும் வகையிலும் அரசியல்நெறி அறவழி இயங்கும் முறையிலும் நன்னெறி காட்டுதற்குக் குறள்நெறி இதழ் தேவைப்படுகிறது.கட்டுரை, கவிதை, இசைப்பாடல்,நாடகம்,கதை என அனைத்து வகைமைகளிலும் குறள்விளக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடனும் குறள்நெறி இதழ் சிறப்பும் சீர்மையும் வலிவும் பொலிவும் பெற்றுப் பீடுநடையிடும் என்பதில் ஐயமுமுண்டோ? சுவைமிக்க சொல்லோவியங்களுடன் மாதம் தோறும் முதல் நாளிலும் பதினைந்தாம் நாளிலும் உங்களைச் சந்திக்க்க் குறள்நெறி உலா வரவுள்ளது.

இணைய முன்னோட்டம்